வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட உலகின் மிகப்பெரிய தொலைநோக்கி!

 

 

உலகின் மிகப்பெரிய ஜேம்ஸ் வெப் (James Webb Space Telescope) தொலைநோக்கி வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதாக நாசா (NASA) விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

நாசாவால் விண்ணில் ஏவப்பட்ட உலகின் மிகப்பெரிய சக்தி மற்றும் திறன் வாய்ந்த ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி பிரெஞ்ச் கயானாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஏரியன் 5 ராக்கெட் மூலம் கடந்த டிசம்பர் மாதம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. 

 

சுமார் 75 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த தொலைநோக்கி நிலவில் இருந்து மூன்று மடங்கு தொலைவுக்கு சென்று, சூரியனை சுற்றியவாறு தனது ஆய்வுப்பணியை மேற்கொள்ளும். 

 

தற்போது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அப்சர்விங் பொசிஷன் என்றழைக்கப்படும் கண்காணிக்கும் நிலைக்குச் செல்கிறது. அது பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஜனவரி மாத இறுதிக்குள் அந்த இடத்தில் தொலைநோக்கி நிலை பெற வேண்டும். ஏற்கனவே இது நிலவின் சுற்றுவட்டப் பாதையைக் கடந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

 

பிரபஞ்சத்தின் முதல் நட்சத்திரத்தை கண்டுபிடிக்கும் சக்திகொண்ட இந்த தொலைநோக்கி நவீன மனித குலம் முன்பு அறிந்திடாத பல அரிய தகவல்களை அடுத்த சில ஆண்டுகளுக்கு அளிக்க உள்ளது.

 

இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை விண்ணில் நிலைநிறுத்தும் பணி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

ராக்கெட்டில் இருந்து, ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி தனியாக பிரிந்து செல்லும் காணொளியைப் படம் பிடித்த கேமரா அமைப்பை, அயர்லாந்தைச் சேர்ந்த ரியால்ட்ரா ஸ்பேஸ் சிஸ்டம் என்ஜினியரிங் என்கிற நிறுவனமே வடிவமைத்தது.

 

பிரெஞ்சு கயானாவில் உள்ள விண்வெளி மையத்திலிருந்து ராக்கெட் ஏவுதலை நிர்வகிக்கும் ஏரியன்ஸ்பேஸ், ரியால்ட்ரா தொழில்நுட்பத்தை ஐரோப்பாவின் அடுத்த தலைமுறை ஏரியன் வாகனமான ஏரியன் 6-ல் பயன்படுத்த உள்ளது.