வரும் ஆண்டுகளில் மாணவர்களின் உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு எப்படி இருக்கும்?

தமிழகத்தில் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு பிரச்னைகள் முடிவயைந்த நிலையில் புதிய கல்வி ஆண்டும் துவங்கி உள்ளதால் புதிய கல்வி ஆண்டுக்கான பாடங்களை நடத்த கல்வி நிறுவனங்கள் தயாராகியுள்ளன.

தயாராகும் பொறியியல் கல்லூரிகள்

'நீட்' தேர்வில் அரசின் பல்வேறு கடுமையான மற்றும் குழப்பமான நிலைப்பாடுகள் மற்றும் கொரோனாவின் அடுத்தடுத்த அலைகளால் மருத்துவப் படிப்பை விட பொறியியல் (Engineering) கல்லுாரிகளில் சேர மாணவர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளதை பார்க்க முடிகிறது. எனவே அனைத்து கல்லுாரிகளும் இந்த புதிய ஆண்டுக்காக தங்களின் கல்லூரி வளாகம் மற்றும் வகுப்புகளை சீர் செய்யும் பணியில் மும்முரமாக இறங்கியுள்ளன.

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் உயர்கல்வி சேர்க்கை (Higher Education Admission) எந்த மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் என்பதில் குழப்பம் நீடிக்கிறது. ஆனால் உயர் கல்வி, மற்றும் அதன் மூலம் கிடைக்கும் மிகச்சிறந்த வேலைவாய்ப்புவருங்காலத்தில் மிகப்பெரிய பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதை பெற்றோர் கவனிக்க வேண்டும். எதிர்கால பொருளாதாரம் முந்தைய ஆண்டுகளை ஒப்பிடும்போது பல மடங்கு முன்னேறப் போகிறது. தற்போது உயர் கல்வியில் சேரும் மாணவர்கள் இன்னும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் படித்து முடிக்கும்போது இம்மிகப்பெரிய பொருளாதார மாற்றத்தால் அவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் மிக சிறப்பானதாகவும் எளிதானதாகவுமே இருக்கும்

மாணவர்களின் கல்லூரி பாடத்திட்ட பட்ட/பட்டய படிப்புகள் மட்டுமின்றி அவர்களின் திறன் மற்றும் திறமைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பாடத்திட்டங்கள் மாற்றப்பட வேண்டும். மாணவர்கள் பொறியியல், கலை, அறிவியல் என என்ன படிப்பை மேற்கொண்டாலும் அவர்களுக்கு தொழில்நுட்பம் கட்டாயம் தெரிந்திருக்கும் வகையில் கல்லூரி பாடத்திட்டங்கள் மாற்றப்பட வேண்டும். குறிப்பாக செயற்கை நுண்ணறிவு, தகவல் அறிவியல், கணினி தொழில்நுட்பம் போன்ற பாடங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். தற்போதைய கொரோனா தொற்று பரவலால் தற்போது 8.4 கோடி பேர் வரை வேலைவாய்ப்பை இழந்துள்ளதாகவும். ஆனால் வரும் ஆண்டுகளில் 9.6 கோடி பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் உலக பொருளாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

முக்கியத்துவம் பெறும் சான்றிதழ் படிப்புகள்

மாணவர்களின் உயர் கல்வி படிப்புக்கான பட்ட மற்றும் பட்டய சான்றிதழ் மட்டுமின்றி மாணவர்களின் தனிப்பட்ட திறன்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சான்றிதழ் படிப்பகளை ஊக்குவிக்க வேண்டும். வங்கி வேலைவாய்ப்புகளில் கூட தொழில்நுட்ப அறிவு முன்னிலை வகிக்கும் நிலையே தற்போதும் உள்ளது. அதனால் தான் ஐ.ஐ.டி. போன்ற உயர் கல்வி நிறுவனங்கள் கூட பொறியியல் மட்டுமின்றி அனைத்து துறைகள் சார்ந்த சான்றிதழ் படிப்புகளையும் இணையதளம் வாயிலாக நடத்த துவங்கியுள்ளனர். புதிய கல்விக் கொள்கையிலும் கூடுதல் சான்றிதழ் படிப்புகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

கூகுள், மைக்ரோசாப்ட், ஹெச்.சி.எல். சோஹோ' என பல உலக முன்னனி தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்களது சான்றிதழ் படிப்புகளுக்கு முக்கியத்துவம் தருகின்றன. பன்னிரெண்டாம் வகுப்பு மட்டுமே முடித்துள்ள மாணவர்களைக் கூட தேர்வு செய்து சான்றிதழ் படிப்பை அளித்து வேலைவாய்ப்பை உருவாக்கித்தரும் தரும் நிலை தற்போது உள்ளது.எனவே கல்லுாரியில் சேரும் மாணவர்கள் இந்த மாற்றத்துக்கு தயாராக வேண்டும். பிரெஞ்ச், ஜப்பானீஸ், ஜெர்மன் போன்ற ஏதாவது ஒரு வெளிநாட்டு மொழிகளையும் மாணவர்கள் படித்துக் கொள்வது நல்லது.இது மாணவர்களின் எதிர்காலத்திற்கு நிச்சயம் பயன்தரும்.

ஆகவே கல்லுாரி படிப்பு மட்டுமின்றி கூடுதல் சான்றிதழ் படிப்புகளையும் மாணவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டும். அதாவது, மிக விரைவில் பொருளாதார முன்னேற்றம் மிகப்பெரிய அளவில் இருக்கப் போகிறது என்பதை மாணவர்களும் பெற்றோரும் உயர் கல்வி நிறுவனங்களும் புரிந்துக்கொண்டு அதற்கேற்ப மாற்றத்துக்குரிய தொழில்நுட்ப மற்றும் திறன் சார்ந்த கல்வியில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.

கொரோனா காலத்தில் பொருளாதாரம் மந்தநிலையில் உள்ளது போன்ற தோற்றம் இருந்தாலும் இது தற்காலிகமானதே. பொறியியல் துறைக்கான வாய்ப்புகள் என்றுமே பிரகாசமாக இருக்கும். இனிவரும் காலங்களில் தகவல் தொழில்நுட்பம் அதுசார்ந்த தஉரை மட்டுமல்லாமல் உற்பத்தி துறை, மருத்துவ உபகரணங்கள், உணவு தொழில்நுட்பம், மோட்டார் வாகன உதிரிபாக உற்பத்தி போன்ற துறைகளிள் வளர்ச்சிக்கும் பெரும் உதவி புரியும் வகையில் மாற்றமடையும்.

எதிர்கால திட்டமிடல்

சர்வதேச மற்றும் உள்நாட்டு தனியார் உற்பத்தி நிறுவனங்கள், சிறு நிறுவனங்கள், சுய தொழில் என அனைத்திலும் வாய்ப்புகள் மிகப்பிராகாமானதாக அமையும். அதனை எதிர்கொள்ள அதுசார்ந்த திறன்களை மாணவர்கள் வளர்த்துக் கொள்ளும் வகையில் உயர் கல்வி நிறுவனங்கள் பாடத்திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி தர வேண்டும்.

பல்வேறு துறைகளில் பகுத்தாய்வு செய்யும் திறன்களை கொண்ட மாணவர்கள் பொறியியல் படிப்பை தேர்வு செய்வது நல்லது. தாங்கள் படிக்கும் துறை மட்டுமின்றி இதர துறை சார்ந்த அறிவையும் அனைவரும் கட்டாயம் வளர்த்துக் கொள்ள முன்வரவேண்டும். தொழில் நிறுவனங்களுக்கு தேவைப்படும் திறன்களை மாணவர்கள் பெற்றிருந்தால், அதற்கான வேலைவாய்ப்பும் ஊதியமும் அளிக்க நிறுவனங்கள் தயாராகவே உள்ளன.

ஆகவே, மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான எந்த துறையினை உயர்கல்வியில் தேர்ந்தெடுத்தாலும் அது சார்ந்த சான்றிதழ் படிப்புளுக்கும் முக்கியத்துவம் அளித்தில் அவர்களின் எதிர்கலம் மிகச்சிறப்பானதாகவே அமையும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.