நொடியில் நிறம் மாறும் காரை வடிவமைத்த பி.எம்.டபள்யூ...!

 

நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை என்பது மலை அளவில் உயர்ந்துக் கொண்டே இருக்கின்றது. பெட்ரோல், டீசல் விலையால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். அதிலும், கார் வைத்துக் கொண்டிருப்பவர்கள், இனி கார்களை பயன்படுத்தலாமா வேண்டாமா என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் எலக்ட்ரிக் வாகனத்தை பயன்படுத்த துவங்கியுள்ளனர்.

 

அந்தவகையில், பெட்ரோல், டீசல் கார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஆட்டோமொபைல் துறையில் ஜாம்பவான்களாக இருக்கும் அனைத்து மிகப்பெரிய கார் நிறுவனங்களும் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் கவனத்தை திருப்பியுள்ளன.

 

இந்த் நிலையில், முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான பி.எம்.டபள்யூ (BMW), தங்களது நிறுவனக் காரில் புதிய தொழில்நுட்பம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

 

இந்த தொழில்நுட்பம், கார்களுக்கு பெயிண்ட் அடிக்கும் செலவை குறைப்பதுடன், விரும்பிய கலர்களை நொடிப்பொழுதில் மாற்றிக்கொள்ளும் வசதியை கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் அண்மையில் நடைபெற்ற Consumer Electronics Show -BMW xi காரில் இந்த தொழில்நுட்பத்தை அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

 

அதாவது, ஒரே ஒரு பட்டனை பிரஸ் செய்வதன் மூலம் காரின் நிறம் நொடிப்பொழுதில் மாறிவிடும். இதற்காக, இ இங்க் எலக்ட்ரானிக் பேப்பர் டிஸ்ப்ளே தொழில்நுட்பத்தைக் கொண்டு காரின் வெளிப்புறத்தை வடிவமைத்துள்ளது பி.எம்.டபள்யூ நிறுவனம் .

 

இப்போதைக்கு வெள்ளை, கருப்பு மற்றும் கிரே ஆகிய மூன்று நிறங்களை மட்டும் நொடிப்பொழுதில் மாற்றிக்கொள்ளும் வகையில் காரை வடிவமைத்துள்ளது பி.எம்.டபள்யூ. அதுமட்டுமல்லாமல் இது ஒரு சைன் புரொஜெக்ட் எனக் கூறியுள்ளது. விரைவில், தங்கள் நிறுவனத்தின் எலக்ட்ரானிக் கார்களில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளது.

 

கோடை காலத்தில் கருப்பு நிறம் வெப்பத்தை அதிகமாக ஈர்க்கும் என்பதால், அந்த நேரத்தில் காரின் கருப்பு நிறத்தை வெள்ளை நிறமாக மாற்றிக் கொள்ளலாம். குளிர் காலத்தில் வெள்ளை நிறத்தில் இருக்கும் காரை கருப்பு நிற கலருக்கு மாற்றிக்கொள்ளலாம். சூழலுக்கு தகுந்தாற்போல் காரின் கலரை மாற்றிக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் கார், வாடிக்கையாளர்களிடையே பெரிய வரவேற்பை பெறும் என பி.எம்.டபள்யூ தெரிவித்துள்ளது.

 

ஏறக்குறைய, பெட்ரோல், டீசல் வாகனங்களின் இறுதி அத்தியாயம் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது என்றுகூட சொல்லலாம். அதேநேரத்தில், எலக்டிரிக் வாகன சந்தை மெதுவாக வளர்ச்சியை நோக்கி பயணிக்கும் நிலையில், அவற்றில் புதுமையை புகுத்தி, வாடிக்கையாளர்களின் ஏகோப்பித்த வரவேற்பை பெற வேண்டும் என்பதில் மிக கவனமாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இருக்கின்றன.