அதிகரிக்கும் ஆட்டோமேஷன் ஆதிக்கம்.. 30 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்..

உலகளவில் தற்போது வர்த்தகம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும், ஐடி சேவைகள் வளர்ந்து வருகிறது, குறிப்பாகக் கொரோனா ஊரடங்கினால் பல இந்திய ஐடி நிறுவனங்கள் ஆட்டோமேஷன் சேவைகளை அதிகளவில் பயன்படுத்தத் துவங்கியுள்ளது.

இதன் அடிப்படையில் வெளியிடப்பட்ட ஆய்வு கணிப்புகளில் இந்திய ஐடி துறையில் 2022 ஆம் ஆண்டுக்குள் சுமார் 30 லட்சம் பேர் தங்களது வேலைவாய்ப்பை இழக்க உள்ளதாக கூறப்படுகிறது.

30 லட்சம் ஊழியர்களைப் பணியில் இருந்து நீக்குவதன் மூலம் சம்பளம் மற்றும் இதர செலவுகள் வாயிலாக மட்டுமே சுமார் 100 பில்லியன் டாலர் அளவிலான தொகையை இந்திய ஐடி நிறுவனங்கள் சேமிக்க முடியும் எனவும் கூறப்படுகிறது.

இந்திய ஐடி நிறுவனங்கள்

இந்தியாவில் ஐடி நிறுவனங்கள் மத்தியில் வளர்ச்சி மற்றும் முன்னிலை குறித்த போட்டி அதிகமாக இருக்கும் காரணத்தால் பணிகளை வேகமாகவும், குறைந்த செலவுகளில் செய்ய வேண்டிய கட்டாயத்தில் எப்போதும் இருக்கும்.

கொரோனா ஊரடங்கு

இந்நிலையில் தற்போதைய கொரோனா ஊரடங்கால் அலுவலகத்திற்கு வந்து பணியாற்ற வேண்டிய பல நிறுவனங்கள் தங்கள் வர்த்தகத்தை முழுமையாகச் செய்ய முடியாமல் முடங்கியது. இதன் காரணமாக பல துறைகள் ஆட்டோமேஷன் தொழில்நுட்பத்திற்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் இந்திய ஐடி நிறுவனங்களுக்குத் தற்போது ஆட்டோமேஷன் பிரிவுக்கு மாறத்தொடங்கியுள்ளன. மேலும் ஆட்டோமேஷன் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு முக்கியக் கருவியாக மாறியுள்ளது.

ஆட்டோமேஷன் ஆதிக்கம்

ஆட்டோமேஷனை பொறுத்த வரையில் ஆரம்பகால செலவுகள் மட்டுமே அதிகமாக இருக்கும். பராமரிப்பு மற்றும் மேம்படுத்துதலுக்கான செலவுகள் குறைவாக உள்ளன். ஆகவே இந்தியாவில் டெக் துறையில் இருக்கும் நிறுவனங்களும், உள்நாட்டு மென்பொருள் சேவை நிறுவனங்களும் ஆட்டோமேஷன்-ஐ கையில் எடுக்க முடிவு செய்துள்ளது. இதனால் அடுத்த ஒரு வருட கால அட்டவணையில் இந்திய ஐடி துறையில் அதிகளவிலானோர் தங்களது வேலைவாய்ப்பை இழக்க நேரிடும் என நாஸ்காம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் 1.6 கோடி ஐடி ஊழியர்கள்

இந்தியாவில் உள்ள ஐடி நிறுவனங்களில் சுமார் 1.6 கோடி ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதில் 90 லட்சம் பேர் குறைந்த திறன் சேவை பிரிவுகளிலும், பிபிஓ போன்ற பிரிவுகளிலும் பணியாற்றி வருகிறார்கள் என நாஸ்காம் தரவுகள் கூறுகிறது.

குறைந்த திறன் சேவை மற்றும் பிபிஓ பிரிவு

குறைந்த திறன் சேவை பிரிவு மற்றும் பிபிஓ பிரிவுகளில் ஆட்டோமேஷன் அதிகளவில் புகுத்தப்படும் காரணத்தால் அவற்றில் பணியாற்றும் 90 லட்சம் ஊழியர்களில் 30 சதவீதம் அல்லது 30 லட்சம் ஊழியர்கள் தங்களது வேலைவாய்ப்பை இழக்க நேரிடும். குறிப்பாக இந்த பிரிவில் சுமார் 7 லட்சம் பேரின் வேலைகள் முழுமையாக ஆட்டோமேஷன் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதர வேலைவாய்ப்புகள்

இந்திய ஐடி நிறுவனங்கள் தொடர்ந்து செய்து வரும் டெக்னாலஜி மேம்பாடு, ஆட்டோமேஷன் மாற்றங்கள் மூலம் மேலும் 23 லட்சம் பேர் தங்களது வேலைவாய்ப்பை இழக்க நேரிடம் சூழ்நிலை உருவாக உள்ளது எனவும் நாஸ்காம் தரவுகள் கூறுகிறது.

ஐடி நிறுவனங்களுக்கு 100 பில்லியன் டாலர் சேமிப்பு

தற்போது 30 லட்சம் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் போது 100 பில்லியன் டாலர் அளவிலான தொகையைச் சேமிக்க முடியும் எனவும் நாஸ்காம் ஆய்வறிக்கை கூறுகிறது. இந்நிலையில் தற்போது டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல், டெக் மஹிந்திரா ஆட்டோமேஷன் செய்யவும், ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் பணிகளில் மும்முரமாக இறங்கியுள்ளது.

ஐடி சேவை துறை இவ்வளவு பெரிய அதிர்ச்சியான ஆய்வறிக்கைகளியும் மீறி இந்திய ஐடி நிறுவனங்களுக்கும், ஐடி சேவையை நம்பியிருக்கும் பிற துறை நிறுவனங்களுக்கு இத்தகைய ஆட்டோமேஷன் சேவை நிறுவப்படுவதன் மூலம் 100 பில்லியன் டாலர் சேமிப்பு மட்டும் அல்லாமல் இந்திய ஐடி நிறுவனங்கள் மத்தியில் 10 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆட்டோமேஷன் மென்பொருள் நிறுவும் வர்த்தகத்தையும் பெற முடியும். 5 பில்லியன் டாலர் மதிப்பிலான புதிய மென்பொருள் உருவாக்குவதற்கான வர்த்தகத்தையும் பெற முடியும். மேலும் 24 மணிநேரமும் இயங்கும் ஒரு சேவை தளம் மூலம் 10 ஊழியர்கள் பணியாற்றும் வேலையை ஒரு சிஸ்டம் மூலம் வெகு விரைவாக பெற முடியும் எனவும் கூறப்படுகிறது.